பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இராமபிரான், இராவணனை கொன்ற பின் இங்கு வந்து மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டார் என்று தலவரலாறு கூறுகிறது. அனுமன் காசிக்குச் சென்று லிங்கத்தைக் கொண்டு வரத் தாமதமானதால் மணலில் லிங்கம் அமைத்தார். அனுமன் கொண்டு வந்த லிங்கம் காசி விசுவநாதலிங்கம் என்ற பெயருடன் அமைந்துள்ளது. அனுமனுக்கும் தனி சன்னதி உள்ளது.
மூலவர் இராமநாதர், லிங்க வடிவில் தரிசனம் தருகின்றார். அம்பாள் 'மலைவளர்காதலி' என்றும் 'பர்வதவர்த்தினி' என்றும் வணங்கப்படுகின்றாள். மகாவிஷ்ணு அந்தணர் வடிவில் வந்து மகாலட்சுமியை மணந்து சேதுமாதவர் என்னும் பெயருடன் இங்கு தரிசனம் தருகின்றார்.
கோயில் எதிரில் உள்ள கடலே அக்கினி தீர்த்தம் என்னும் பெயருடன் கோயில் தீர்த்தமாக விளங்குகின்றது. இருந்தாலும் இங்கிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி தீர்த்தமே தல தீர்த்தமாக கூறப்படுகிறது. இராமபிரான் தனது அம்பால் கீறி உருவாக்கியதால் இப்பெயர் பெற்றது. இப்போதும் பக்தர்கள் அங்கு சென்று நீராடுகின்றனர். இவைத் தவிர கோயிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன. பக்தர்கள் இத்தீர்த்தங்களில் புனித நீராடுகின்றனர்.
காசி யாத்திரை செல்பவர்கள், இங்குள்ள அக்கினி தீர்த்தத்தில் (கடல்) இருந்து நீரை சொம்பில் எடுத்துச் சென்று காசியில் உள்ள கங்கையில் சேர்த்து, அங்கிருந்து அதே சொம்பில் கங்கையைக் கொண்டு வந்து இராமநாதருக்கு அபிஷேகம் செய்து தமது யாத்திரையை நிறைவு செய்வார்கள். வடஇந்திய பக்தர்களும் பெருமளவில் இங்கு வந்து நீராடி இராமநாதரை தரிசனம் செய்கின்றனர்.
இராமேஸ்வரம் கோயிலின் பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றது. நான்கு பிரகாரங்களும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டு, கட்டடக் கலைக்கு உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. அதிலும் மூன்றாம் பிரகாரம் உலகப்புகழ் பெற்றது.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழால் போற்றிப் பரவியுள்ளார்.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும், அப்பர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|